துர்க்மேனிஸ்தானுக்கு எதிராக நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஏஎவ்சி ஆசிய கிண்ண 3ஆவது தகுதிகாண் சுற்றின் கடைசி முதலாம் கட்டப் போட்டி இலங்கைக்கு சவால் மிக்கது. எனவே இலங்கை அணிக்கு கடுமையாக போராட வேண்டிவரும் என இலங்கை கால்பந்தாட்ட அணித் தலைவர் சுஜான் பெரேரா தெரிவித்தார்.
இலங்கைக்கும் துர்க்மேனிஸ்தானுக்கும் இடையிலான ஏஎவ்சி ஆசிய கிண்ணம் 2027 சவூதி அரேபியா 3ஆவது தகுதிகாண் சுற்றின் முதலாம் கட்டப் போட்டி (டி குழு) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நாளை வியாழக்கிழமை (09) பிற்பகல் 3.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஐந்து தினங்கள் கழித்து இரண்டு அணிகளும் அர்க்காதாக் விளையாடடரங்கில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டப் போட்டியில் மொதவுள்ளன.
முதலாம் கட்டப் போட்டிக்கு முன்னதாக கால்பந்தாட்ட இல்ல கேட்போர்கூடத்தில் இன்று புதன்கிழமை (08) பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ‘வீரகேசரி ஒன்லைன்’ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே துர்க்மேனிஸ்தான் சவால் மிக்க அணி என சுஜான் பெரேரா தெரிவித்தார்.
இலங்கைக்கும் துர்க்மேனிஸ்தானுக்கும் இடையில் 2003இலிருந்து 2019வரை நடைபெற்ற 6 போட்டிகளிலும் முழுக்க முழுக்க இலங்கையில் பிறந்த வீரர்களே விளையாடி இருந்தனர். அந்த வீரர்களைக் கொண்டு துர்க்மேனிஸ்தானுக்கு சவாலாக விளங்கி இறுக்கமான தோல்விகளையே இலங்கை தழுவியிருந்தது. ஒரு போட்டியை (2004இல்) வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.
இப்போது ஐரோப்பிய நாடுகளிலும் அவுஸ்திரேலியாவிலும் பிறந்து அந்தந்த நாடுகளில் கால்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபட்டுவரும் வீரர்களே பெரும்பாலும் இலங்கையின் முதல் பதினொருவர் அணியில் இடம்பெறுகின்றனர். அவர்களைக் கொண்டு துர்க்மேனிஸ்தானை வீழ்த்த முடியுமா அல்லது போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொள்ள முடியுமா என ‘வீரகேசரி ஒன்லைன்’ கேள்வி எழுப்பியது.
அதற்கு பதிலளித்த சுஜான் பெரேரா, ‘அக்காலங்களில் முழுக்க முழுக்க உள்ளூர் கழகங்களில் விளையாடிய வீரர்கள் முழு வீச்சில் விளையாடியதை நான் அறிவேன். ஆனால், இப்போது உலக நாடுகளில் கால்பந்தாட்டம் எவ்வளவோ முன்னேறியுள்ளது. அதனால்தான் எமது அணியில் வெளிநாடுகளில் பிறந்த இலங்கை வம்சாவழிகளை இணைத்துக்கொண்டு விளையாடி வருகிறோம். துர்க்மேனிஸ்தான் இலகுவான அணியல்ல. கடும் சவால் மிக்கது. ஆனால், நாங்கள் கடும் பிரயாசை எடுத்துக்கொண்டு விளையாடி சிறந்த பெறுபேறை பதிவுசெய்ய முயற்சிப்போம்’ என்றார்.
வீரர்கள் அனைவரும் சிறந்த மனோநிலையுடன் நாளைய போட்டியையும் துர்க்மேனிஸ்தானில் அக்டோபர் 14ஆம் திகதி இரண்டாம் கட்டப் போட்டியையும் எதிர்கொள்ளவுள்ளதாகவும் சுஜான் பெரேரா கூறினார்.
இதேவேளை, இலங்கை அணி கடும் சவால்மிக்கது என துர்க்மேனிஸ்தான் கால்பந்தாட்டப் பயிற்றுநர் ரோவ்ஷான் மெரிடோவ் தெரிவித்தார்.
ஏஎவ்சி ஆசிய கிண்ணம் 2027க்கான இறுதிச் சுற்றில் துர்க்மேனிஸ்தானை பங்குபற்றச் செய்வதே தனது குறிக்கோள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையுடனான போட்டியில் உங்களால் சாதிக்க முடியுமா என அவரிடம் கேட்டபோது,
‘நாங்கள் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றியீட்டி 6 புள்ளிகளுடன் டி குழுவில் முதலிடத்தில் உள்ளோம். ஆனால், சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் வெகுவாக முன்னேறியுள்ள இலங்கையை எதிர்கொள்வது இலகுவல்ல. அவ்வணியுடன் விளையாடுவது சவால் மிக்கது. எனவே,6 புள்ளிகளை ஒதுக்கிவைத்துவிட்டு பூஜ்ஜியத்திலிருந்து எமது பயணத்தைத் தொடரவுள்ளோம். இலங்கை அணியை, குறிப்பாக அதன் சொந்த மண்ணில் குறைத்து மதிப்பிட நாங்கள் தயாராக இல்லை. எனவே இந்தப் போட்டியில் முழுப் பலத்துடன் விளையாடி வெற்றிபெற முயற்சிப்போம். ஏனெனில் எமது இலக்கு ஆசிய கிண்ணம் 2027 இறுதிச் சுற்றுக்கு தகுதிபெறுவதாகும்’ என ரோவ்ஷான் மெரிடோவ் கூறினார்.
டி குழுவில் இடம்பெறும் இலங்கை தனது முதலாவது போட்டியில் தாய்லாந்துக்கு கடும் சவாலாக விளங்கி 0 – 1 என்ற கோல் கணக்கில் இறுக்கமான தோல்வியைத் தழுவியது.
எனினும் சைனீஸ் தாய்ப்பே வுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் மிக அற்புதமாக விளையாடிய இலங்கை 3 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
துர்க்மேனிஸ்தான் தனது இரண்டு போட்டிகளிலும் முறையே சைனீஸ் தாய்ப்பேயை 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் தாய்லாந்தை 3 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் வெற்றிகொண்டு 6 புள்ளிகளுடன் டி குழுவுக்கான அணிகள் நிலையில் முதலிடத்தில் இருக்கிறது.
இலங்கையும் துர்க்மேனிஸ்தானும் ஒன்றையொன்று 6 தடவைகள் எதிர்த்தாடியுள்ளன. அவற்றில் ஐந்தில் துர்க்மேனிஸ்தான் வெற்றிபெற்றதுடன் ஒரு போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளது.
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் இலங்கை 197ஆவது இடத்திலும் துர்க்மேனிஸ்தான் 138ஆவது இடத்திலும் இருக்கின்றன.
இலங்கை குழாம்
சுஜான் பெரேரா (தலைவர்), கவீஷ் பெர்னாண்டோ, மொஹமத் முர்சித், மொஹமத் ஹஸ்மீர், ஜேசன் தயாபரன், அனுஜன் ராஜேந்த்ரம், குளோடியோ கெமர்க்நெச், ஸாஹி அத்திஸ், வில்லியம் தோமாசன், மோஹமத் முன்சிவ், கெரத் கெலி, ஆதவன் ராஜமோகன், நிலோஷன் செந்தூர்வாசன், லியோன் பெரேரா, ஜெரெமி பெரேரா, பாரத் சுரேஷ், அமான் பைஸர், வசீம் ராஸீக், வேட் டெக்கர், ஒலிவர் கெலாட், சாம் டுரான்ட், டிலொன் டி சில்வா, ராஹுல் சுரேஷ்.